கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 6 Minute walk test என்றால் என்ன? இதை செய்வது எப்படி?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

 

நாட்டின் பல நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடலில் எவ்வளவு ஆக்ஸிஜன் அளவு இருக்கிறது என்பதை அறிய 6 நிமிட நடை சோதனை (6 Minute walk test) செய்ய மருத்துவ நிபுணர்களும் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.

 

1 /4

கொரோனா வைரஸ் தொற்று உங்கள் நுரையீரலை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் நுரையீரல் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள இந்த 6 நிமிட நடை சோதனை உங்களுக்கு உதவும். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மற்றும் புனேவில், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த 6 நிமிட நடை பரிசோதனையை தினமும் இரண்டு முறை செய்ய சுகாதாரத் துறை கட்டாயமாக்கியுள்ளது. 6 நிமிட நடை சோதனை என்றால் என்ன? இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தின் நிலையை எவ்வாறு சொல்ல முடியும்? அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். 

2 /4

மருத்துவர்களின் கூற்றுப்படி, வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகள் அவ்வப்போது தங்கள் ஆக்ஸிஜன் அளவை சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதில் 6 நிமிட நடை சோதனை அவர்களுக்கு உதவக்கூடும். 

3 /4

இதைச் செய்ய, நோயாளி முதலில் தனது ஆக்ஸிஜன் அளவை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse Oximeter) மூலம் அளவிட வேண்டும். அதன் பிறகு அவர் அறையில் நிறுத்தாமல் 6 நிமிடங்கள் நடக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் தனது ஆக்ஸிஜன் செறிவு அளவை சரிபார்க்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 93% க்கும் குறைவாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் இருந்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் 6 நிமிட நடைக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். இது நுரையீரல் பிரச்சினை அல்லது உடலில் ஆக்ஸிஜன் குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

4 /4

உடலில் ஆக்ஸிஜனின் அளவை சரிபார்க்க, நோயாளி ஒரு நாளில் 2-3 முறை இந்த பரிசோதனையை செய்ய வேண்டும். டாக்டர்களின் கூற்றுப்படி, லேசான அறிகுறிகள் உள்ள வீட்டில் தனிமையில் வாழும் கொரோனா நோயாளிகள் தங்கள் ஆக்ஸிஜன் அளவை தவறாமல் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பலமுறை ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலும் நோயாளிக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை. பலரது உடல் நிலை திடீரென மோசமாகி விடுகிறது. இந்த 6 நிமிட நடை சோதனையை கொரோனா அறிகுறிகள் தென்பட்ட 5 ஆவது நாளிலிருந்து 12 ஆவது நாள் வரை தினமும் செய்ய வேண்டும்.