Latest News on FASTag: மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு விதிகளின் மூலமும், சீர்திருத்தங்கள் மூலமும் வாகன ஓட்டுனர்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. தற்போதும் அது போன்ற ஒரு புதிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நீங்கள் கார் ஓட்டுபவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தால், ஃபாஸ்டாக்கில் (Fastag) குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
Fastag-ஐ சிறப்பாகப் பயன்படுத்த குறைந்தபட்ச இருப்பு நிலையை NHAI ரத்து செய்துள்ளது. இந்த வசதி கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக வாகனங்களுக்கு குறைந்தபட்ச இருப்பு இன்னும் கட்டாயமானதாகத்தான் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கூறுகையில், இப்போது FASTag வழங்கும் வங்கிகள் பாதுகாப்பு வைப்புத் தவிர வேறு எந்த குறைந்தபட்ச இருப்பையும் வைத்திருப்பதை கட்டாயமாக்க முடியாது என்று கூறியுள்ளது. முன்னதாக, வங்கிகள் FASTag-ல் பாதுகாப்பு வைப்புக்கு கூடுதலாக, குறைந்தபட்ச நிலுவைத் தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டிருந்தன.
வங்கி வாடிக்கையாளர்களிடம் குறைந்தபட்ச நிலுவைத் தொகையாக ரூ .150 முதல் ரூ .200 வரை வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டது. FASTag வாலெட்டில் குறைந்தபட்ச இருப்பு இல்லையெனில் டோல் பிளாசாவில் பயணிகள் மேற்கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டார்கள். இதனால் பயணிகள் அவதிக்கு ஆளானார்கள்.
FASTag கணக்கு / பணப்பையில் நெகடிவ் இருப்பு இல்லாத வரை ஓட்டுனர்கள் இப்போது டோல் பிளாசா வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று NHAI முடிவு செய்துள்ளது. அதாவது, ஃபாஸ்டாக் கணக்கில் பணம் குறைவாக இருந்தாலும் கார் டோல் பிளாசாவைக் கடக்க அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர் FASTag-ஐ ரீசார்ஜ் செய்யாவிட்டால், பாதுகாப்பு வைப்பில் இருந்து அந்த தொகையை வங்கி மீட்டெடுக்க முடியும்.
தற்போது நாடு முழுவதும் 2.54 கோடிக்கும் அதிகமான FASTag பயனர்கள் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் மொத்த கட்டண வசூலில் 80% FASTag உடையது ஆகும். இந்த நேரத்தில், FASTag மூலம் தினசரி சுங்க வசூல் ரூ .89 கோடியைத் தாண்டியுள்ளது. பிப்ரவரி 15, 2021 முதல், டோல் பிளாசாவில் FASTag மூலம் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் 100% பணமில்லா டோல் அதாவது கேஷ்லெஸ் டோலை கொண்டு வருவது NHAI-வின் இலக்காகும்.