IND vs SL: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI Prediction) ஏற்பட உள்ள மாற்றம் குறித்து இதில் காணலாம்.
இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், தற்போது ஓடிஐ தொடரை சமன் செய்ய வேண்டுமென்றால் இந்த போட்டியை வென்ற ஆக வேண்டும்.
3 டி20 மற்றும் 3 ஓடிஐ போட்டிகளில் விளையாட இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஒருநாள் தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலையில் உள்ளது. டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி இந்த போட்டியையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. இதனை தவிர்த்து தொடரை சமன் செய்ய இந்தியா முயற்சிக்கும்.
எனவே, கடைசி ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனில் இந்தியா பல மாற்றங்களை செய்யும் என தகவல்கள் வெளியாகின. அதிரடிக்கு பெயர் போன கௌதம் கம்பீர் யோசிக்காமல் ஃபார்மில் இல்லாத வீரர்களை தூக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பார் என கூறப்படுகிறது.
இருப்பினும், நாளைய போட்டியில் பெரிதாக மாற்றம் வர வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மாற்றம் இருக்கும் எனலாம். திணறும் கேஎல் ராகுலுக்கு பதில் ரிஷப் பண்ட் உள்ளே கொண்டுவரப்படலாம்.
ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கின் மேல் கம்பீருக்கு அபரமான நம்பிக்கை இருக்கும் என்பதால் இன்னும் ஒரு வாய்ப்பு அவருக்கு வழங்க வாய்ப்புள்ளது. மாறாக கேஎல் ராகுலுக்கு பதில் ரிஷப் பண்டை உள்ளே வர வைப்பதால் அணியும் பலமாகிறது.
திணறும் இந்தியாவின் மிடில் ஆர்டரில் விரைவாக ரன்களை குவிக்கவும், ஸ்பின்னர்களிடம் அதிரடி காட்டவும் ரிஷப் பண்ட்தான் சரியான நபர். எனவே, ரிஷப் பண்ட் வரவே அதிக வாய்ப்பிருக்கிறது. தூபேவின் மீடியம் பேஸ் பந்துவீச்சும் தேவை என்பதால் அவரையும் நீக்க முடியாது. குல்தீப், அக்சர், வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்களே போதுமானது. இலங்கை 43 ஓவர்களையும் சுழற்பந்துவீசியதால் ரியான் பராக்கையும் உள்ளே கொண்டு வந்து பந்துவீச்சு ஆப்ஷனாக பார்ப்பது சரியாகாது.
இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்