புதுடெல்லி: இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அல்லாத ஒப்பந்தங்கள் மூலம் பெரும் தொகையை சம்பாதிக்கிறார்கள். தற்போது யாரிடம் அதிக அளவில் சொத்து மதிப்பு உள்ளது எனப் பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் முதலிடத்தில் உள்ளார். "கிரிக்கெட் கடவுள்" என அழைக்கப்படும் சச்சின், இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ .1090 கோடி. மேலும், அவர் பல்வேறு பிராண்டுகளின் தூதராக உள்ளார். இதனால் ஸ்பான்சர்ஷிப் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். தோனியின் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டு ஆசிய கோப்பைகளை வென்றுள்ளது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி 20 உலகக் கோப்பை மற்றும் முக்கியக் கோப்பையான கிரிக்கெட் உலகக் கோப்பையை 2011 ஆம் ஆண்டு கைப்பற்றியது. எம்.எஸ்.தோனி 767 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) தற்போதைய தலைமுறையின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. 638 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3 வது பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார். கோஹ்லி தனது சொந்த பேஷன் பிராண்டுகளான வ்ரோக்ன் (Wrogn) மற்றும் ஒன் 8 (பூமாவுடன் கூட்டு) வைத்திருக்கிறார். ஃபோர்ப்ஸின் உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 2012 இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ரிக்கி பாண்டிங் உலகின் 4 வது பணக்கார கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அவரது நிகர மதிப்பு ரூ .500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன் பிரையன் லாரா (Brian Lara), உலகின் 5 வது பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ .415 கோடி என்று கூறப்படுகிறது.