Half Yearly Exams Dates: பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் எப்போதும் நடைபெறும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு தேதிகள் முன்கூட்டிய திட்டமிடப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டது.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிச. 4) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,"வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால் அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம்" என்றார்.
மேலும் அவர்,"இதுகுறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை தவிர மீதமுள்ள பள்ளிகளில் வரும் டிசம்பர் 9ஆம் தேதியில் இருந்து அரையாண்டு தேர்வு எவ்வித மாற்றமின்றி நடைபெறும்.
2500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்து விட்டால் உடனடியாக 2500 பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க தயாராக இருக்கிறோம்.
எந்தெந்த பள்ளிகளில் புத்தகங்களோடு மாணவர்களின் சான்றிதழ்கள் நனைந்துள்ளதோ அந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகங்களும் உடனடியாக வழங்கப்படும். சான்றிதழ் வைக்கும் அறை, தலைமை ஆசிரியர் அறை தரைதளத்தில் இருந்தால் உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றவும் கூறியுள்ளோம்" என்றார்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி டிச. 9ஆம் தேதி தொடங்கும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டது.