Saving Accounts Interest Rate: பிப்ரவரி மாதத்தில், அரசு வங்கிகளுடன் சேர்ந்து சில தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC ஆகியவை அடங்கும். இந்த வங்கிகளில் கணக்குகளை திறக்க விரும்புபவர்களும், ஏற்கனவே கணக்குகள் உள்ள வாடிக்கையாளர்களும், வட்டி விகிதங்களில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
இந்தியாவின் தனியார் கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தியுள்ளது. இருப்பினும், கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் தினசரி இருப்புத்தொகைக்கு வட்டி கணக்கிடப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. எனினும், அது காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும். ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்புக் கணக்கில் 3 சதவீத வட்டியும், ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ. 1,000 கோடிக்கு குறைவாக உள்ள இருப்புக்கு 3.50 சதவீத வட்டியும் அளிக்கப்படும். 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு இருக்கும் கணக்குகளுக்கு 4.50 சதவீத வட்டி கிடைக்கும். திருத்தப்பட்ட கட்டணங்கள் உள்நாட்டு, என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தும் என்று HDFC வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் & சிந்து வங்கியும் பிப்ரவரி 1 முதல் சேமிப்பு வங்கி வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் ரூ.10 கோடிக்கும் குறைவான சேமிப்பு கணக்கு இருப்புக்கு 3% வட்டி விகிதம் அளிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள இருப்புத் தொகைக்கு வட்டி விகிதம் 3.20% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் உள்நாட்டு, NRO மற்றும் NRE சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தும்.
பொதுத்துறை கடன் நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி உள்நாட்டு மற்றும் என்ஆர்இ சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும், வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள ரூ.10 லட்சம் ரூபாய் இருப்புக்கு முன்னர் 2.80% வட்டி விகிதம் இருந்தது, தற்போது, அது 2.75% ஆகக் குறைந்துள்ளது. PNB ரூ.10 லட்சம் முதல் ரூ.500 கோடிக்கும் குறைவான இருப்புகளுக்கு 2.85% வட்டி விகிதத்தை வழங்கியது, இது பிப்ரவரி 2022 முதல் 2.80% ஆக மாற்றப்பட்டுள்ளது. சேமிப்பு நிதி இருப்பில் ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட கணக்கு இருப்புக்கு 3.25 விகித வட்டி வழங்கப்படும்.
RBL வங்கி, சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புத்தொகை (FD), தொடர் வைப்புத்தொகை (RD) மீதான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, புதிய விகிதங்கள் பிப்ரவரி 3, 2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 3, 2022 முதல், வங்கி 7-14 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ. 3 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதத்தை வழங்கும். 15 முதல் 45 நாட்களுக்கு 3.75% வட்டி மற்றும் 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் மெச்யூர் ஆகும் வைப்புகளுக்கு 4% வட்டியும் வழங்கப்படும். 91 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 4.50% வட்டியும், 181 நாட்கள் முதல் 240 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5% வட்டியும் அளிக்கப்படும்.