Independence Day 2024: வருகிற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து ஆண்டுதோறும் இந்நாளில் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓடிடியில் இருக்கும் சுதந்திர உணர்வை ஊட்டக்கூடிய டாப் படங்களை பார்க்கலாம்.
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1959-ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு ஈடு ஆகாது என சினிமா பிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பப்படும் திரைப்படம் என்றால் அது அர்ஜுன் இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் தான். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மிகவும் நேர்த்தியாக படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் அர்ஜுன். இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஞ்சிதா நடித்திருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தை சித்தரித்து எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ‘இந்தியன்’ படமும் ஒன்று. இதில் சேனாபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரராக கமல்ஹாசன் நடித்தார். பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய, ‘இந்தியன்’, இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வேதனையைப் பற்றி பேசும் படமாக வெளிவந்தது.
நடிகர் கமல்ஹாசன், ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம். இத்திரைப்படம் தேசபக்தியை தூண்டும் வகையில் எடுக்கப்பட்டதுடன் இஸ்லாமியர் - இந்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஒரு படமாகவும் அமைந்தது.
நடிகர் சாயாஜி ஷிண்டே, தேவையாணி நடிப்பில் கடந்த 2000ல் வெளியான திரைப்படம் பாரதி. மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ஆனது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் அனுபவித்த அவலங்களை எடுத்த காட்டியுள்ளது.
சீதா ராமனை சேர்த்ததால், காதல் படம் ஏன் லிஸ்டில் சேர்ந்தது என தவறாக நினைக்க வேண்டாம். காதலுக்கும் தேசத்துக்கும் இடையே நடக்கும் போர் எப்போதும் கடினமானது, அதைத்தான் இந்தப் படம் காட்டுகிறது. இது ஒரு காதல் கதையாக இருந்தாலும், ராமின் தேசத்தின் மீதுள்ள அன்பையும் அவரது கடமையையும் இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்துள்ளனர்.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR சுதந்திரத்திற்கு முந்தைய கால பயணத்தை காட்டுகிறது. சுதந்திரத்திற்கு முன் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுடன் எப்படிப் போரிட்டார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இந்த படம் உண்மையில் அதை காட்டுகிறது. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் சுதந்திர போராட்ட வீரர்களாக நடித்துள்ளனர்.
நடிகர் கௌதம் கார்த்திக், புகழ் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947. தகவல் தொடர்பு வசதி இல்லா கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரம் குறித்து அறியாமல், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் படும் இன்னல்களை இத்திரைப்படம் காட்டியுள்ளது.