ICC World Cup 2023: இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் காயத்தால் உலகக் கோப்பை தொடரில் விலகி உள்ளார். இதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக அனுபவ ஆல்-ரவுண்டர் ஒருவரை அந்த அணி அழைத்துள்ளது.
ICC World Cup 2023: இலங்கை அணியில் யார் வெளியேறியது, யாரை அந்த அணி அழைத்துள்ளது என்பது குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி நெதர்லாந்து அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, மற்ற மூன்றிலும் தோல்வியடைந்து 9ஆவது இடத்தில் உள்ளது.
அந்த அணி முதல் இரண்டு போட்டிகளில் 300+ ரன்களை தாண்டினாலும் அதில் அந்த அணியால் வெற்றியடைய இயலவில்லை. அந்த அணியின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 428 ரன்களை கொடுத்தது, பாகிஸ்தானை 345 ரன்கள் சேஸ் செய்யவிட்டது என பந்துவீச்சு மிக மோசமானதாகவே அமைந்தது.
அதில் முக்கியமாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவின் பந்துவீச்சு பெரிதாக அந்த அணிக்கு கைக்கொடுக்கவில்லை. முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 95 ரன்கள் கொடுத்து 1 விக்கெட், இரண்டாவது போட்டியில 9 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் என ரன்களை வாரி இறைத்தார்.
பாகிஸ்தான் போட்டியில் பதிரானாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அடுத்த 2 போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், மதீஷா பதிரானாவுக்கு பதில் அனுபவ வீரர் ஏஞ்சலோ மாத்யூஸை இலங்கை கிரிக்கெட் வாரியம் மாற்று வீரராக அறிவித்துள்ளது. அவர் இங்கிலாந்துடன் நாளை மறுநாள் (அக். 26) நடைபெறும் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
36 வயதான ஏஞ்சலோ மாத்யூஸ் இலங்கைக்கு அணிக்காக மொத்தம் 221 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5865 ரன்களையும், 120 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். இலங்கை அணியின் கேப்டன் ஷனகாவும் காயத்தால் தொடரில் இருந்து சில நாள்கள் முன் விலகியது குறிப்பிடத்தக்கது.