Lifestyke Tips: பிரபல பாலிவுட் நடிகரான சுனிஷ் ஷெட்டி 63 வயதிலும் இளமை துள்ளலுடன் இருப்பதற்கு பின்னிருக்கும் ரகசியத்தை பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைமுறையில் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து சுனில் ஷெட்டி அந்த பழைய வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.
BeerBiceps எனப்படும் பாட்காஸ்ட் சேனலுக்கு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கடந்த வருடம் அளித்த பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுனில் ஷெட்டி அவரின் உணவு பழக்கவழக்கம் மற்றும் பிட்னஸ் ஆகியவை குறித்து பேசியிருந்தார்.
சுனில் ஷெட்டி தனது இளமையின் ரகசியத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்த வயதிலும் அவர் பொலிவுடன் இருப்பதற்கு 80 சதவீதம் உணவு, 10 சதவீதம் உடற்பயிற்சி, 10 சதவீதம் மற்ற பழக்கவழக்கங்கள் என்றார்.
தினமும் காலையில் 5-6 மணிக்குள் தான் எழுந்துவிடுவதாக அவர் கூறினார். காலையிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இரவு 9-10 மணிக்குள் தூங்கிவிடுவதாக கூறும் சுனில் ஷெட்டி, ஒருவேளை அப்படி தூங்க முடியாவிட்டாலும் அடுத்த நாள் காலையில் சரியாக 5-6 மணிக்குள் எழுந்துவிடுவேன் என்றும் அவர் கூறினார். இதனை ஈடுகட்டும் விதமாக அந்த வாரத்திலேயே ஒரு நாளில் முன்கூட்டியே தூங்கச் சென்றுவிடுவேன் என்றும் கூறினார்.
வீட்டில் சமைத்த எளிமையான உணவையே தான் பெரும்பாலான நேரத்தில் உண்ணுவதாகவும், ஹோட்டலிலோ வெளியிலோ சமைத்த உணவுகளை தவிர்த்துவிடுவதாகவும் சுனில் ஷெட்டி கூறியிருந்தார். இருப்பினும், ஹோட்டலில் சமைத்த உணவுகள் தனக்கு பிடிக்கும் என்றும், அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பது தெரியாததால் அதை தவிர்ப்பதாகவும் கூறினார்.
மேலும், வெள்ளை உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுவதாக சுனிஷ் ஷெட்டி கூறினார். அதாவது, உப்பு, சர்க்கரை, அரிசி ஆகியவற்றை அவர் சாப்பிட மாட்டார் என கூறியுள்ளார்.
சுனில் ஷெட்டிக்கு வயது 63 ஆகும். இருப்பினும் இன்னும் உடல் ஆரோக்கியத்துடன் இளமைத் துடிப்புடன் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 2001ஆம் ஆண்டில் வெளியான 12B திரைப்படத்திலும், 2020ஆம் ஆண்டில் வெளியான தர்பார் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் மகள் ஆதியா ஷெட்டியைதான் பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மணந்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் சுனில் ஷெட்டி தெரிவித்ததாகும். இதை பின்பற்றும் முன் மருத்துவ வல்லுநரை ஆலோசனை செய்ய வேண்டும். இதை Zee News உறுதிப்படுத்தவில்லை.