கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், மலரும் நினைவுகளை எல்லாம் உருக்கமாக நினைவு கூர்ந்து வருகிறார்.
தமிழ்நாட்டு வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி முதன்முறையாக நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், அதன்பிறகு இந்திய அணிக்கு வருவதும் போவதுமாகவே இருந்தார்.
தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்துவிட்டதால், தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு என்பது இந்திய அணியில் நிரந்தமாக இல்லாமல் போனது. அதற்கு இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சறுக்கல்களை கட்ட டிகே, மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கொஞ்ச காலம் காணாமல் போனார்.
பின்னர் அதில் இருந்து மீண்ட அவர், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு முழுமூச்சாக கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த தொடங்கினார் தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய டிகே, அந்த அணி கடந்த ஏலத்தில் ரீட்டெயின் செய்யாததால் ஆர்சிபி அணிக்கு மீண்டும் திரும்பினார். அந்த அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதால், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார்.
இந்திய அணியில் அதுவும் 35 வயதுக்குப் பிறகு டிகே இடம்பிடித்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. வாழ்க்கையில் மிகப்பெரிய எடுத்துக்காட்டான நிகழ்வாக தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை அமைந்தது. அந்த உலக கோப்பைக்கு பின்னர், இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு கிரிக்கெட் வரண்ணையாளராக தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
ஐபிஎல் 2024 வந்ததும் மீண்டும் கிரிக்கெட்டராக அவதாரம் எடுத்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது புருவத்தையும் உயர வைத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து, விரைவில் வர இருக்கும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் தினேஷ் கார்த்திக்கின் பெயரை பிசிசிஐ பரிசீலிக்கவில்லை. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தினேஷ் கார்த்திக், ஐபிஎல் 2024ல் நல்ல பல இன்னிங்ஸூகளை ஆர்சிபி அணிக்காக விளையாடிவிட்டு மகிழ்ச்சியோடு கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துவிட்டார். இனி கிரிக்கெட் வர்ணனையாளராகவே வலம் வர இருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றால் 2022 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தது தான் என்கிறார் தினேஷ் கார்த்திக்.
அதற்கு முழு காரணம் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமே, அவர்களால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் பூரிப்போடு தெரிவித்திருக்கிறார் அவர். இதற்கு என்றென்றும் ஆர்சிபி அணிக்கும், ரசிகர்களுக்கு நன்றிகடன் பட்டிருப்பேன் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.