Best Small Savings Schemes: முதலீட்டு செய்யும் அனைவரும் தங்கள் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்க வேண்டும் என்பதோடு, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அந்த வகையில், முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய சிறந்த சிறு சேமிப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொதுவான முதலீட்டு விருப்பங்களில் ஒன்று நிலையான வைப்பு (FD) ஆகும். இருப்பினும், FD முதலீடுகள் தவிர, சிறு சேமிப்புத் திட்டங்கள் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் 8.2 சதவீதம் வரை வருமானத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறவும் உதவுகிறது.
தபால் அலுவலக டெபாசிட் கணக்கில் (Post Office Time Deposit Scheme) குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்யலாம். தற்போது, தபால் அலுவலகத்தின் 5 வருட FDக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இது தவிர, 5 வருட FDயில் வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட எவரும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில் மொத்தத் தொகையாக ரூ.1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை இருக்கலாம். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி விலக்கும் கிடைக்கும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (Post Office Monthly Income Scheme), குறைந்தபட்ச மாதாந்திர முதலீடு ரூ 1000 ஆகவும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கில் ரூ 9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கில் ரூ 15 லட்சமாகவும் இருக்கும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் ஒரு உத்தரவாத வருமானம் தரும் முதலீடு மற்றும் சேமிப்புத் திட்டம். இதில் கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வட்டி முதிர்ச்சியின் போது அசலுடன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதலீட்டுக்கு வரி விலக்கு பலன் கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 500 ஆகவும், அதிகபட்சத் தொகை ரூ. 1.5 லட்சமாகவும் இருக்கும். டெபாசிட்களை ஒரே தொகையாகவோ அல்லது தவணையாகவோ செய்யலாம். PPF இல் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து டெபாசிட் செய்தால், மிக எளிதாக கோடீஸ்வரராகலாம். தற்போது PPF -க்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
கிஸான் விகாஸ் பத்திரம் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்புச் சான்றிதழ். NSC திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ 1000 ஆகும், அதிகபட்ச வரம்பு இல்லை. இதில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் கூட்டு வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில், 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் முதலீட்டாளர்களின் பணம் இரட்டிப்பாகும்.
இந்தியப் பெண்களிடையே சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கான இந்தத் திட்டத்திற்கு (Mahila Samman Savings Certificate) ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனினும் திட்டத்தில் வரிச் சலுகை கிடையாது.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமாகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 250 ஆகவும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சமாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யலாம். ஒரு மாதம் அல்லது நிதியாண்டில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரம்பு இல்லை.