Moeen Ali : அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் மொயீன் அலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலி பெயர் இடம்பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டெய்லி மெயலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம் என மொயீன் அலி கூறினார்.
அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து எனக்கும் விளக்கப்பட்டது. நானும் இது சரியான நேரம் என்று உணர்ந்தேன். அதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளேன் என்று மொயின் அலி அந்த பேட்டியில் கூறினார்.
2014 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துக்காக ஒயிட்-பால் அறிமுகமான மொயீன், 10 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார்.
அந்த ஆண்டிலேயே இலங்கை இங்கிலாந்துக்கு சென்றபோது, லார்ட்ஸ் மைதானத்தில் தன்னுடைய முதல் டெஸ்டிலும் அறிமுகமானார், ஒட்டுமொத்தமாக 68 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஆடியுள்ளார்.
மொயீன் அலி 8 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் உட்பட 6678 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் மூன்று வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக 366 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மொயீன் அலி பேசும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலில் இங்கிலாந்துக்காக விளையாடும்போது, எத்தனை ஆட்டங்களில் விளையாடப் போகிறேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால், கிட்டத்தட்ட 300 போட்டிகளில் விளையாடிவிட்டேன்.
என்னால் மீண்டும் இங்கிலாந்துக்காக விளையாட முயற்சிக்க முடியும். ஆனால் நான் விளையாட மாட்டேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். அதனைத் தொடர்ந்து பயிற்சியாளராகவும் விருப்பம் உள்ளது என மொயீன் அலி கூறியுள்ளார்.