சென்னையில் திங்கட்கிழமை இரவு முதலே வேளச்சேரி, ஆலந்தூர், மயிலாப்பூர், போரூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த மழை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் கனமழை மட்டுமின்றி பலமாக காற்று வீசி வருகிறது.
வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சோஷிங்கநல்லூர், தாம்பரம், மேடவாக்கம், ஓஎம்ஆர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகிய வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு நகரும்.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும், கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் நவம்பர் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.