8th Pay Commission, Latest Updates: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது.
அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்கவும், பணவீக்கத்தை எதிர்கொள்ளவும், நாட்டின் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி 2023 -ல் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 2023 -ல் மீண்டும் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில், அடுத்த ஊதியக்குழு அதாவது 8 ஆவது ஊதியக்குழு அமைப்பது குறித்த ஒரு மிகப்பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது.
அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8 ஆவது ஊதியக்குழுவை கொண்டு வர வேண்டும் ஆகியவை இந்த முக்கிய கோரிக்கைகளாகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இது உத்தரவாத ஓய்வூதியம் கிடைப்பதற்கான வழிவகைகளையும் அரசு மும்முரமாக செய்து வருகிறது.
இதேபோல் அரசு ஊழியர்களை மகிழ்விக்க 8 ஆவது ஊதியக்குழுவையும் கொண்டு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எட்டாவது ஊதியக் குழுவை நாடு முழுவதும் அரசாங்கம் விரைவில், 2023 ஆம் ஆண்டிலேயே அமல்படுத்தலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 8வது ஊதியக்குழுவுக்கு மோடி அரசு விரைவில் கிரீன் சிக்னல் கொடுக்கலாம்.
2013-ம் ஆண்டு 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட்டது.
தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், இம்முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கப்படும். அதனால் ஊழியர்களின் சம்பளம் 18 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரமாக உயரும்.
புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.