ஆன்லைன் கடன் மோசடி: நீங்கள் அவசரகாலத்தில் ஆன்லைன் கடன் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். டிஜிட்டல் லோன் எடுக்க இன்று பல தளங்களும் செயலிகளும் சந்தையில் வந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கடன்களுக்கான சரியான செயலி அல்லது தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த சில தகவல்களை பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
ஆன்லைனில் கடன் வாங்கும் போது எப்போதும், பதிவு செய்யப்பட்ட செயலி அல்லது தளங்களை மட்டுமே பயன்படுத்தவும். போலியான அல்லது அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் தளம் அல்லது மொபைல் செயலியை நாட வேண்டாம். பதிவு செய்யப்பட்ட செயலி அல்லது தளங்களை பயன்படுத்தினால், எந்த ஒரு மோசடிக்கும் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.
போலி டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் எளிதாக கடன் தருவதாக அடிக்கடி கூறுகின்றன. இதுபோன்ற எந்த ஒரு மாயையிலும் மக்கள் விழ வேண்டாம் என்று PIB கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் தங்கள் KYC ஆவணங்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை அறியப்படாத நபர், அங்கீகரிக்கப்படாத நபர் அல்லது செயலியில் பகிர வேண்டாம் என்று PIB கேட்டுக் கொண்டுள்ளது.
நீங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் செயலி அல்லது தளத்தை எதிர்கொண்டால், Sachet போர்ட்டலில் (sachet.rbi.org.in) புகார் செய்யலாம்.
வங்கிகள் மற்றும் NBFC கள் பயன்படுத்தும் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள் வங்கி அல்லது NBFC யின் பெயரை வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.