அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இதுவரை (2020 ஏப்ரல் 1 முதல் 2020 நவம்பர் 13) அடல் ஓய்வூதிய திட்டத்தின் (APY) கீழ் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.63 கோடியைத் தாண்டியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இதுவரை இல்லாத வகையில் பல சவால்கள் இருந்தபோதிலும், 2020-21 நிதியாண்டில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இது, வங்கிகளின் தொடர் முயற்சிகளின் விளைவாகும் என பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
APY என சுருக்கமாக அழைக்கப்படும் அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana) என்பது இந்திய அரசாங்கத்தின் உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாகும், இது சந்தாதாரருக்கு மூன்று பயன்களை வழங்கும், 60 வயதை எட்டும்; சந்தாதாரருக்கு குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம், சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கைத் துணைக்கு அதே உத்தரவாத ஓய்வூதியம் மற்றும் சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதியத் தொகை நாமினிக்கு திரும்பக் கொடுத்தல் என மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது APY.
APY திட்டத்தில் யார் சேர முடியும்? இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் APY திட்டத்தில் சேரலாம். திட்டத்தில் சேருவதற்கான தகுதி: - (i) சந்தாதாரரின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். (ii) அவர் / அவள் ஒரு சேமிப்பு வங்கி கணக்கு / தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் .
குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் மாதந்தோறும் 1,000 ரூபாய் அல்லது அதன் மடங்காக (2,000 / 3,000 / 4,000 / 5,000 ரூபாய்) இருக்கும். 60 வயதை எட்டியது முதல், சந்தாதாரர்கள் தேர்ந்தெடுத்த ஓய்வூதியத் தொகை அவர்களுக்கு கிடைக்கத் தொடங்கும்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான திட்டம் இந்திய அரசு தொடங்கிய ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் Atal Pension Yojana.
ஆதார் எண் தேவை விண்ணப்பதாரர்கள் தங்கள் APY கணக்கிலும், APY திட்டத்திலும் அவ்வப்போது செய்திகளைப் பெற APY இன் கீழ் பதிவுசெய்யும்போது வங்கிக்கு மொபைல் எண்ணை வழங்கலாம். APY திட்டத்தில் சேரும்போது ஆதார் எண் கொடுக்கவேண்டும்.
APY திட்டத்தில் சேருவதால் என்ன நன்மை? அடல் ஓய்வூதிய யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் கொடுப்பதற்கு அரசு உத்தரவாதம் கொடுக்கிறது. அதாவது ஓய்வூதிய பங்களிப்புகளின் உண்மையான வருமானம் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்திற்கான வருவாயைக் காட்டிலும் குறைவாக இருந்தால், பற்றாக்குறையாகும் நிதியை அரசே கொடுக்கும். அதே நேரத்தில், ஓய்வூதிய பங்களிப்புகளின் உண்மையான வருமானம் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்திற்கான வருமானத்தை விட அதிகமாக இருந்தால், அந்த பலன்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்.
அரசாங்கத்தின் பங்களிப்பு 2015 ஜூன் முதல் தேதியில் இருந்து 2016 மார்ச் 31 ஆம் தேதி வரை அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு, மொத்த பங்களிப்பில் 50% அல்லது ஆண்டுக்கு 1000 ரூபாய், இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ, அதை அரசு தகுதிவாய்ந்த ஒவ்வொரு சந்தாதாரருக்கும் அரசு தன்னுடைய பங்களிப்பாக கொடுக்கிறது. இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள், எந்த சமூக பாதுகாப்பிலும் பயனடையாதவர்களாகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்க்க்கூடாது. இதற்காக அரசாங்கத்தின் இணை பங்களிப்பானது, 2015-16 நிதியாண்டு முதல் 2019-20 நிதியாண்டு வரை 5 ஆண்டுகள் வழங்கப்படும்.
திட்டத்தின் சிறப்பம்சம் என்ன? இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, 60 வயதுக்கு பின்னர் சந்தாதாரர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த ஓய்வூதியத் தொகை கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு இந்த தொகை கிடைக்கும்.