இந்தியத் திரைத் துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது- தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுபவரும் முதல் படமான ராஜா அரிச்சந்திராவை இயக்கியவருமான தாதா சாகேப் பால்கேவின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தாங்கள் சார்ந்துள்ள திரைத் துறையினுடைய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதமாக இந்த விருது கொடுக்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதைப் பெற்ற நிலையில் நடப்பாண்டில் இந்த விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது எனும் விபரம் தெரியவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவிலிருந்து இவ்விருதுக்குத் தேர்வாக வாய்ப்புள்ள சிலர் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
இளையராஜா:
இந்திய இசைத்துறையில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளவர் இளையராஜா. சுமார் 4 தசாப்தங்களாக தமிழ்த் திரை இசை உலகைக் கட்டி ஆண்டுவரும் இளையராஜா, கோலிவுட்டின் இசை முகமாகக் கருதப்பட்டு வருகிறார். இசை தொடர்பாக உலகின் எந்த ஒரு உயரிய விருதுக்கும் தகுதியானவராகக் கருதப்படும் இளையராஜா, தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்கிறது இசை உலகம்.
தனது அசாத்தியமான இசை ஆளுமையால் தமிழ் சினிமாவின் இசைப்போக்கையும் திரைப்போக்கையுமே மாற்றியவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது. இளையராஜாவின் கலைச் சேவையைப் பாராட்டி அவரை நாடாளுமன்ற நியமன எம்.பியாக குடியரசுத் தலைவர் அண்மையில் அறிவித்தார். இதனால் தாதா சாகேப் பால்கே விருதும் நடப்பாண்டில் அவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜானகி:
பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி கணக்கிலடங்கா பாடல்களை பாடியுள்ளவர் எஸ். ஜானகி. தன் வசீகரக் குரலால் தமிழ் நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஜானகிக்கு அவர் படைத்த சாதனைகளின் அளவுக்கு சரியான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை எனும் கருத்து ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் இருந்துவருகிறது. லதா மங்கேஸ்கர், ஆஷா போஸ்லே போன்றோருக்கு வழங்கப்பட்டதைப் போல ஜானகிக்கும் இவ்விருது வழங்கப்படுவதே நியாயம் எனும் பேச்சும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது.
அது மட்டுமல்லாமல், தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது காலம் தாழ்த்தி அறிவிக்கப்பட்ட ஒன்று எனக் கூறி அவ்விருதையே புறக்கணித்தவர் பாடகி ஜானகி. இந்தச் சம்பவம் நடந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்தபோதும் அவருக்கு இன்னும் பெரிய அளவிலான விருதுகள் வழங்கப்படவில்லை. இதனால் இம்முறை தாதாசாகேப் பால்கே விருதாவது ஜானகிக்கு வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
கமல்ஹாசன்:
குழந்தைப் பருவத்திலிருந்து சினிமாவில் இருந்துவரும் நடிகர் கமல்ஹாசன், இத்துறையில் தொடாத ஏரியாவே கிட்டத்தட்ட இல்லை எனக் கூறிவிடலாம். அசாத்தியமான நடிப்பு, இந்திய சினிமாவில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியவர் என அறியப்படும் கமல்ஹாசன், கலைக்காக தனது உடலை வருத்திகொள்வது மட்டுமல்லாலம் பல முறை தனது பணத்தையும் வருத்திக்கொண்டவர். நடிகர்களைப் பொறுத்தவரை சிவாஜி கணேசனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. கமலுக்கு முன்னதாக ரஜினிக்கு இவ்விருது வழங்கப்பட்டது அப்போது சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் இம்முறை கமல்ஹாசன் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜா! - சி.எஸ்.கே அணியின் ரியாக்சன் என்னனு பாருங்க!
பாரதிராஜா:
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவுக்கு இன்றளவும் திரைத் தாகம் தீர்ந்தபாடில்லை. என் இனிய தமிழ் மக்களே என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாரதிராஜா, தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்களுள் முக்கியமான ஒருவராகப் புகழப்படுகிறார். அரச குடும்பத்துக் கதைகள் மாயாஜாலக் கதைகள் நகரங்களை மையப்படுத்திய கதைகள் என வலம் வந்த தமிழ் சினிமா, பாரதிராஜா போன்றோரின் வருகையாலும் அவர்கள் கொடுத்த ஸ்திரமான வெற்றியாலும்தான் கிராமங்களை நோக்கியும் படையெடுக்கத் தொடங்கியது என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமா கிராமங்களை நோக்கிப் படையெடுத்ததும் கிராமத்தினர் பட வாய்ப்பு தேடி நகரங்களை நோக்கிப் படையெடுத்ததும் இவரது வருகையையொட்டித்தான். கிராமத்திலிருந்து இயக்குநர் கனவோடு வந்த பலருக்கு இவர்தான் ஒற்றை நம்பிக்கையாகவும் இருந்தார். தமிழ் இயக்குநர்களைப் பொறுத்தவரை தாதாசாகேப் பால்கே விருது கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தடவை பாரதிராஜா பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ