ஜெயிலரில் ஆர்சிபி ஜெர்ஸி... கேஸ் போட்ட நிர்வாகம் - அடிபணிந்த சன் பிக்சர்ஸ்!

Jailer RCB Case: ஜெயிலர் திரைப்படத்தில் ஆர்சிபி அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகள் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 29, 2023, 08:34 AM IST
  • அந்த காட்சிகளில் மாற்றம் கொண்ட வர சன் பிக்சர்ஸ் ஒப்புதல்.
  • செப். 1ஆம் தேதி முதல் திரையரங்கில் அந்த காட்சிகள் மாற்றப்பட வேண்டும்.
  • ஓடிடி, தொலைக்காட்சி பதிப்புகளிலும் மாற்றப்பட வேண்டும்.
ஜெயிலரில் ஆர்சிபி ஜெர்ஸி... கேஸ் போட்ட நிர்வாகம் - அடிபணிந்த சன் பிக்சர்ஸ்! title=

Jailer RCB Case: ரஜினியின் புதிய படமான ஜெயிலரின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு (ஆர்சிபி) இடையேயான வழக்கில் நேற்று (ஆக. 28) தீர்வு காணப்பட்டது. 

கூலிக்காக கொலை செய்யும் ஒரு நபர் ஆர்சிபி ஜெர்சியை அணிந்திருக்கும் காட்சியை படத்தில் இருந்து நீக்குவதற்கு ஜெயிலர் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாக ஒரு பார் & பெஞ்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விவரம்

ஜெயிலரின் ஒரு காட்சியில், கொலை செய்யும் ஒரு கதாபாத்திரம் ஆர்சிபி அணியின் ஜெர்சி அணிந்திருப்பதைக் காணலாம். அவர் ஒரு பெண் கதாபாத்திரத்தின் மீது இழிவான மற்றும் பாலியல் கருத்துக்களையும் சொல்லும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆர்சிபி அணியின் ஆலோசகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதன் ஜெர்சியை அனுமதியின்றி பயன்படுத்துவது பிராண்டின் ஈக்விட்டி மற்றும் அதன் ஸ்பான்சர்களின் உரிமைகளை எதிர்மறையாக பாதிக்கலாம் என வாதிடப்பட்டது. 

மேலும் படிக்க | தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு

என்ன தீர்மானம்?

இருதரப்பு வக்கீல்களும் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதற்கும், அந்த காட்சியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் திரையரங்கு பதிப்பில் கூறப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தது. மேலும், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் உள்ள பதிப்புகளும் அந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் என்பதை அந்நிறுவனம் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "பிரதிவாதிகள் மற்றும் அவர்களின் விநியோக நெட்வொர்க் உட்பட அவர்களின் சார்பாக செயல்படும் அனைத்து தரப்பினரும் மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவார்கள். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ஜெயிலர் திரைப்படத்தின் திரையரங்க சித்தரிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜெர்சி திருத்தப்பட்ட/மாற்றப்பட்ட நிலையில் இருக்கும். 

2023ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு, எந்தத் திரையரங்கிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியை எந்த வடிவத்திலும் காட்சிப்படுத்தக் கூடாது என்பதை பிரதிவாதிகள் உறுதிசெய்ய வேண்டும். தொலைக்காட்சி, சாட்டிலைட் அல்லது ஏதேனும் ஓடிடி இயங்குதளத்தைப் பொறுத்தமட்டில், அது வெளியிடப்படுவதற்கு முன்பு, படத்தின் மாற்றப்பட்ட பதிப்பு ஒளிபரப்பப்படும்/ஒளிபரப்பு செய்யப்படும்.

ஜெயிலர் வசூல்

ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆக. 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது வரை ரூ. 607 கோடியை வசூல் செய்துள்ளதாக கருத்து தெரிவிக்க முடியாது. 

மேலும் படிக்க | திருப்பதி பாவாடை தாவணியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News