2005ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஜோதிகா, நாசர், பிரபு, வடிவேலு என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு மேல் சந்திரமுகி படம் திரையங்கில் ஓடியது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சந்திரமுகி போலவே சந்திரமுகி 2 படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தையும் பி வாசு இயக்கிய உள்ளார்.
மேலும் படிக்க | Karthik Subbaraj Movie: மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்த பிரபல ஹீரோ
ராதிகா தனது மகன், மகள், பேர குழந்தைகளுடன் மிகப்பெரிய தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார். திடீரென்று அவரது குடும்பத்திற்கு அடுத்தடுத்த தடங்கல்கள் வருகிறது. அவரது மகளான லட்சுமி மேனனுக்கு கார் விபத்து, அவர்கள் நடத்தி வரும் தொழிற்சாலையில் தீ விபத்து என தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வருகிறது. இந்நிலையில், அவர்களது ஜோதிடரை அழைத்து கேட்ட போது, உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல் இருப்பதுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம், உடனே அங்கு என்று பூஜை செய்யுங்கள் என்று கூறுகிறார். இவர்களும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு போகின்றனர். இவர்களுடன் ராதிகாவின் இன்னொரு ஓடிப்போன மகளின் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பாதுகாவலனாக ராகவா லாரன்ஸ் செல்கிறார். ராதிகாவின் குடும்பம் வேட்டையாபுர அரண்மனையில் தங்கி கோவில் பூஜை மேற்கொள்கின்றனர். அரண்மனையின் ஒனராக வடிவேலு அந்த வீட்டில் இருந்து வருகிறார்.
சந்திரமுகி முதல் பாகத்தை போலவே இதிலும், தெற்கு பக்கம் இருக்கும் அறைக்கு யாரும் போக வேண்டாம் என்று ராதிகாவின் குடும்பத்திற்கு கூறப்படுகிறது. ஆனால், வழக்கம் போல ஒருவர் அந்த அறைக்கு சென்றுவிடுகிறார். இதனால் தூங்கி கொண்டிருந்த சந்திரமுகி பேய் மீண்டும் முழித்து கொண்டு வேட்டையனை 2வது முறையாக பழிவாங்க துடிக்கிறது. இறுதியில் அந்த பேய்யை எப்படி விரட்டுகிறார்கள் என்பதே சந்திரமுகி 2 படத்தின் கதை.
கதை கேட்க பலசாக இருப்பது போல் திரை கதையும் பலசாக உள்ளது. நேற்று படம் பார்க்க ஆரம்பித்தவர்கள் கூட அடுத்து என்ன நடக்கும் என்று சொல்லும் அளவிற்கு தான் திரைக்கதை உள்ளது. கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தாலும் நல்ல திரை கதையை அமைத்திருக்கலாம். ராகவா லாரன்ஸ் தொடங்கி ராதிகா வரை அனைவருமே நடிப்பு கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்கு தான் நடித்துள்ளனர். அதிலும் வடிவேலு காமெடி என நினைத்து கொடுக்கும் ரியாக்சன்களும் டயலாக்குகளும் கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. இரண்டாம் பாதியில் வரும் கங்கனா திரையில் ஜொலிக்கிறார், சந்திரமுயாக படத்தில் அவர் மட்டும் தனியாக தெரிகிறார்.
இது சந்திரமுகி 2 படத்தின் கதையா அல்லது சந்திரமுகி படத்தின் Spoof ஹா என்றும் தெரியவில்லை. காரணம் சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த காட்சிகள் அனைத்தும் அப்படியே இரண்டாம் பாகத்திலும் எடுத்து வைத்துள்ளனர். வடிவேலுவிடம் ரஜினி பேய் இருக்கிறதா? இல்லையா என்ற காட்சி, மனோபாலா சாமியாராக வீட்டிற்கு பூஜை செய்ய வரும் காட்சி, ஜன்னல் வழியாக சந்திரமுகி நடனம் ஆடுவதை பார்க்கும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம். இரண்டாம் பாதியில் வேட்டையணின் பிளாஸ்பேக்கை காண்பிப்பதாக வரும் பீரியட் காட்சிகள் அனைத்தும் சிரிப்பை தான் வர வைக்கிறது.
மேலும், படம் முழுக்கவே சிஜி படு மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் ஹீரோ இன்ட்ரோடக்சன் தொடங்கி இறுதியில் கங்கனா நாயுடன் சண்டை போடுவது வரை படம் முழுக்க சிஜி காட்சிகள் கொஞ்சம் கூட நம்பும் படியாக இல்லை. ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளரா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்ற சந்தேகமும் எழும் அளவிற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை. மொத்தத்தில் சந்திரமுகி 2 பார்க்கலாமா என்று கேட்டால் வீட்டிலேயே சந்திரமுகி முதல் பாகத்தை பார்க்கலாம்.
மேலும் படிக்க | பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ