குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
தற்போதைய நவீன காலக்கட்டத்தில் எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும், மாணவர்களின் ஸ்கூல் பேகிற்கு மட்டும் ஒரு தீர்வு எட்டப்படவில்லை. தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கொண்டு செல்லும் ஸ்கூல் பேக் அவர்களின் எடையை விட அதிக எடையுடன் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியிலியான சோர்வு ஏற்படுவதுடன், அவர்கள் கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது குஜராத் மாநில அரசு.
குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளதன. பள்ளிக்கல்வித் துறையை சீர்திருத்தும் நடவடிக்கையான பிராக்னா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்கூல் பேக் கொண்டு செல்ல தேவையில்லை. அவர்கள் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பள்ளியிலேயே வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வீட்டுப்பாடமும் வழங்கப்படுவதில்லை, அதற்கு பதிலாக கதை சொல்லுதல், பாடல், நடிப்பு போன்ற செயல்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த செயல்முறை காரணமாக குழந்தைகளும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்.
சுராஜ் என்ற மாணவர் இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு இங்கே நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் பள்ளியிலேயே கிடைப்பதால் நாங்கள் இங்கேயே பாடங்களை கற்கிறோம். மேலும் தினசரி புதுப்புது செயல்களை கற்றுகொள்கிறோம். எனவே நாங்கள் இங்கு ஸ்கூல் பேக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.