உலகம் போற்றும் நாடகவுலகின் பிதாமகன் ; ஷேக்ஸ்பியர்!

உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியரான ஷேக்ஸ்பியர், நாடகத்துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்ததோடு  அல்லாமல் ;  உலகளாவிய பெருமைக்கு வித்திட்டார். இன்று அவரது பிறந்த நாளாகும். அந்நன்னாளை நாமும் மகிழ்வோடு கொண்டாடுவோம்.  

Written by - Amarvannan R | Last Updated : Feb 26, 2023, 10:40 AM IST
உலகம் போற்றும் நாடகவுலகின் பிதாமகன் ; ஷேக்ஸ்பியர்! title=

தமிழ் நாடக வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது ; ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்றால் அகு மிகையாகாது| அதிலும், ஷேக்ஸ்பியரின் 'ரோமியோ ஜூலியட்' நாடகமானது ; உலகப்புகழ் பெற்றதாகும். பெரும்பாலான நாடுகளில் பலமுறை மேடைகளில் அரங்கேறிய நாடகமாகும். 1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி இவ்வுலகுக்கு அறிமுகமான அவர், தொடக்க கல்வியைக்கூட முழுமையாகக் கற்கவில்லை. அந்தளவிற்கு வறுமையின் உச்சம் அவரது குடும்பத்தை வாட்டி வதைத்த காலமது. ஆகையால், சிறு வயதிலேயே குடும்பத்துக்காக வேலைக்குச் சென்று உழைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஷேக்ஸ்பியர் தள்ளப்பட்டார். 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலிருந்து சுமார் 40கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெயர் அறியாத ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவர், குடும்ப சூழல் காரணமாக பொருளாதார தேவையை கருதி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, 12வயதில் தலைநகரான லண்டனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டார். ஆயினும் அவருக்கு நிரந்தர வேலை எதுவும் உடனடியாக அமையவில்லை. இந்நிலையில் அவருக்குக் கிடைத்த தற்காலிக வேலையான கூலி தொழில்தான், அவர் பசியாறுவதற்கு உதவியது. 

அடுத்தடுத்து அவர் தேடிக்கொண்ட வேலை அவருக்கு கொஞ்சம் முன்னேற்றத்தைக் கொடுத்தது. அதனால் தனக்குப் போக மீதி பணத்தைக் குடும்பத்துக்கு அனுப்பிவைத்து உதவினார்.  வேலை நேரம் முடிந்தபின் ஷேக்ஸ்பியர், ஓய்வுநேரங்களில் லண்டன் தலைநகரில் ஆங்காங்கே நடைபெறும் மேடை அரங்கில் நாடகத்தை காண சென்றார். வெறும் பொழுதுபோக்குக்காக நாடகம் பார்க்க சென்ற அவர், நாளடைவில் அதில் ஈர்க்கப்பட்டு, ஓய்வுநேரத்தையெல்லாம் நாடகம் பார்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அதற்காக அதிக நேரத்தையும் செலவிட்டார். குறுகிய காலத்திலேயே  100நாடகங்களுக்குமேல் பார்த்துவிட்டார். ஆரம்ப பள்ளியைக் கடக்காத நிலையிலும் அவருக்குள் இருந்த நாடகம் பார்க்கும்  அதீத ஆர்வமே அவரை பின்னாளில் உலகரங்கில் நாடகாசிரியராக உயர்த்தியது.

வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், மொத்தம் 37நாடகங்களை இயற்றியுள்ளார். அவரது படைப்புகளில் நீங்காத இடத்தைப் பிடித்தவை, 'ரோமியோ - ஜூலியட்'.  ஏனெனில்,  பள்ளி பருவத்தில் பெரும்பாலான கல்விக்கூடங்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்களிலும் ; கல்லூரி விழாக்களிலும் 'ரோமியோ - .ஜூலியட்' நாடகத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது.  அந்தளவிற்கு, 'ரோமியோ - ஜூலியட்' நாடகத்தில் இடம்பெற்ற  உணர்ச்சிமிக்க  காதல் காட்சிகளானது வயது வித்தியாசமின்றி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தியாக ஊடுருவி நின்றது.  அக்கதாபாத்திரத்தில் புனிதமான காதலை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர், துளியளவுக்கூட காமத்துக்கு இடம் கொடுக்கவில்லை. 

அதுவே, 'ரோமியோ - ஜூலியட்' வெற்றிக்கு அடிதளமிட்டது. அவ்வெற்றியே அந்நாடகத்தை உலக முழுவதும் கொண்டுபோய் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தது. இந்நிலையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு வித்திட்டது என்பது குறித்து சுருக்கமாக காண்போம் : நமது நாட்டில் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலுபவர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்கவேண்டும் என 1835ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ சட்டம் இயற்றப்பட்டது.

அதன்பின், ஆங்கில கவிதைகள், நாடகங்கள், நாவல்கள் ஆகியவற்றை நம் மாணவர்கள் படிப்பதற்கு வழிவகைகள். செய்யப்பட்டன. அதற்கு  ஆங்கில அரசின் உதவியோடு அந்நாளில்  தொடங்கப்பட்ட சென்னை பள்ளி புத்தக இலக்கிய சங்கம்  உறுதுணையாக இருந்தது. இச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் கையடக்க பதிப்பில் ஓரணா, இரண்டனா என குறைந்த விலையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து, அவற்றை எளிய நடையில் மிகச் சுருக்கமாக வெளியிட்டனர். அதன் வாயிலாக காலப்போக்கில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு  ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ஒரு வித்தாக அமைந்தது. 

அது மட்டுமின்றி ; உலக நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவராகவும் ஷேக்ஸ்பியர் திகழ்ந்தார்.  ஏனெனில், உலகிலுள்ள பல நாடுகளை ஆக்கிரமித்து அதிகாரத்துக்குவந்த ஆங்கில அரசு கல்விக்கூடங்கள் மூலம் ஆங்கிலத்தை பயிற்றுவிக்க தொடங்கியதாலும் ; பாடத்திட்டத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறித்த கதைகள் இடம்பெற்றதாலும் ஷேக்ஸ்பியர் கல்விச்சாலை வழியாக உலகெங்கும் பயணிக்கத் தொடங்கினார். அது மட்டுமின்றி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளில் இடம்பெற்ற பாடத்திட்டத்தின் மூலம் ஷேக்ஸ்பியர் எனும் நாடகக் கவிஞர் அங்கு நிரந்தரமாக குடியமர்ந்துவிட்டார். 

ஆயினும் முதன்முதலில் ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகளுக்கு வாசல் திறந்து வரவேற்பு அளித்தது ; தமிழ்நாடுதான். அதற்கு சென்னை பள்ளி புத்தக இலக்கிய சங்கத்தின் பங்களிப்பானது அளவிற்கரியதாகும். அதன்பின்னரே உலக நாடக அரங்கில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கின என்பது வரலாறு. காலப்போக்கில் உலக நாடுகள் பலவற்றிலும் ஷேக்ஸ்பியர் அவரது நாடகக் கதைகள் மூலம் வார இதழ், மாத இதழ், மொழிபெயர்ப்பு நாவல்கள், திரைப்படங்கள் வாயிலாக உள்நுழைந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டார் என்பதுதான் முற்றிலும் உண்மை. அதேவேளையில், நமது நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படாமல் இருந்திருந்தால், ஷேக்ஸ்பியருக்கு இந்தியாவில் இவ்வளவு பெயரும் புகழும் கிட்டியிருக்காது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

ஷேக்ஸ்பியர் இயற்றிய  37 நாடகங்களில் இன்பியல் நாடகங்களும் துன்பியல் நாடகங்களும் சமமாக இடம்பெற்றன.  அவற்றுள் 'ஹாம்லெட்' தனித்துவமான இடத்தைப் பிடித்தாலும் ; இன்பியல் நாடகமான 'ரோமியோ ஜூலியட்', மற்றும் துன்பியல் நாடகமான 'ஜூலியஸ் சீசர்' ஆகிய இரண்டும் உலகம் உள்ளவரை உயிர்ப்புடன்தான் இருக்கும். ஏனெனில், காதலுக்கு முக்கியத்துவம் அளித்த ,'ரோமியோ ஜூலியட்'டும் ; நம்பிக்கைத் துரோகத்தை வெளிப்படுத்திய, 'ஜூலியஸ் சீசரும்' இன்றளவும் உலகளாவிய மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இதுவே நாடக உலகில் ஷேக்ஸ்பியருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

படிப்பறிவை பள்ளி தொடக்க காலத்திலேயே பாதியில்விட நேரிட்டாலும் பட்டறிவு மூலம் தன்னை முழுமையாக பட்டை தீட்டிக்கொண்ட ஷேக்ஸ்பியர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். மேலும் அவரது அயராத முயற்சியும் ; கடின உழைப்பும்தான் அவரை உலக நாடக அரங்கின் உச்சத்துக்குக் கொண்போய் சேர்த்தன. உலகம் போற்றும் நாடகவுலகின் பிதாமகன் என அழைக்கப்படும் ஷேக்ஸ்பியருக்கு இன்று 459வது பிறந்தநாளாகும். இந்நன்னாளில் இப்பிதாமகனை கொண்டாடி மகிழ்வோம்.

எழுத்தாக்கம் : இரா. அமர்வண்ணன்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News