தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23ஆக உயா்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இந்நிலையில் ஏற்கனவே காட்டுத்தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது, குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு 39 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். காட்டுக்குள் டிரக்கிங் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உள்ளனர். இதனால் இருள் சூழ்ந்ததால் சிலர் அங்கும் இங்கும் சிதறி ஓடி உள்ளனர். இதில் சிலர் பள்ளத்தாக்குகளுக்குள் விழுந்துள்ளனர்.
பின்னர், மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. முதல் நாளில் 27 போ் மீட்கப்பட்டனா். இவா்களில் 10 போ் எந்தவித பாதிப்பும் இன்றி திரும்பியதால் அவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா்.
மீட்கப்பட்ட 27 போ் 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 10 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 8 பேர் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிசை அளிக்கப் பட்டு வந்தது.
இதில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 12 பேர் இறந்தனர். இதையடுத்து காட்டூத் தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை (ஏப் 3) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரி (25) உயிரிழந்தார். இதையடுத்து சிவசங்கரியின் சடலம் உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழன்கிழமை மாலை (ஏப் 5) உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.