டெல்லியில் காற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குகிறது!
டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய அளவிலேயே தொடர்வதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசு, அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதில் கூட கடும் சிரமம் அடைந்துள்ளனர். பனிகலந்த மாசு, சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.
காற்று மாசுபாடைக் குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் டெல்லியில் காற்று மாசு குறைந்தபாடில்லை. காற்று, மழை போன்ற வானிலை நிலவரமும், அங்கு மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை. இதன்காரணமாக மேக விதைப்பு என்ற செயற்கை முறை மூலம் மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு இறங்கியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு மோசமானால் அடுத்த நடவடிக்கையாக இதை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். மேகங்களில் ரசாயனங்களை தூவுவதன் மூலம் மழையை பெய்யச் செய்வதே மேக விதைப்பு முறையாகும்.