லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுக்குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு அதிகாரம் பொருந்திய லோக்பால் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இந்த சட்டத்தின் படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் யார்? என்பதை பரிந்துரைக்க தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் SBI முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
Supreme Court requests Search Committee to complete the task of shortlisting names for Lokpal & its members, by February end and submit a panel of names for consideration of Selection Committee. It also asks Centre to provide the necessary infrastructure for the Search Committee.
— ANI (@ANI) January 17, 2019
மத்திய அரசு அமைத்துள்ள இந்த குழு லோக்பால் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேடி கண்டுபிடித்து அரசுக்கு பரிந்துரை செய்வர். இதனையடுத்து, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் இந்த பரிந்துரைகளை இறுதி செய்த பின்னர், அவர்கள் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.
லோக்பால் குழு அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோக்பால் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை வரும் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், லோக்பால் நியமனம் தொடர்பான பெயர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழுவுக்கு பிப்ரவரி மாதத்துக்குள் வழங்க வேண்டும் என லோக்பால் தேடுதல் குழுவுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.