மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது!
தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
கடந்த 19-ஆம் தேதி மக்களவையில் இந்த சட்ட திருத்த வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்புகளையும் மீறி தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தன. எனினும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்கவில்லை.
The Right to Information (Amendment) Bill, 2019 passed by Rajya Sabha. pic.twitter.com/OW0oF3gqQ0
— ANI (@ANI) July 25, 2019
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளதால், இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. மேலும் அவரின் ஊதியம் தேர்தல் ஆணையருக்கு நிகராக உள்ளது. இனிமேல் தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக் காலம் மற்றும் நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 13,16,27 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.