Rajasthan Assembly Election 2023: இன்னும் சில மாதங்களில் ராஜஸ்தான் மாநிலம் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையமும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இப்போது இதற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. இதற்கிடையில் பல வித வினோத நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
கோட்டாவில் நடந்த வினோத சம்பவம்
செயலுத்தி ரீதியாக மிகவும் முக்கியமான மாவட்டமான கோட்டாவின் சங்கோட் தொகுதியின் எம்எல்ஏ பரத் சிங், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக வெளிப்படையாகவே தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தொடங்கியுள்ளார். செவ்வாயன்று, முதல்வர் கெலாட்டுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்த அவர் தனது தலையை மொட்டையடித்துக்கொண்டார். முன்னதாக, கெலாட் ஒரு ஊழல் அமைச்சரைப் பாதுகாப்பதாகவும், அவரது ஆலோசனையைப் புறக்கணிப்பதாகவும் சிங் குற்றம் சாட்டியிருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது அரசாங்கத்தின் மீது ஏன் கோபப்படுகிறார்? அவரது கோவத்திற்கான காரணம் என்ன? இது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
முதல்வரை குற்றம் சாட்டும் எம்எல்ஏ
உண்மையில், ஊழல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளைஞர்களுக்கு சீட் வழங்குதல், வயதான தலைவர்களை அரசியலில் பின்தள்ளுதல், சட்டவிரோதமான சுரங்க ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் பரத் சிங் தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட்டை குற்றம் சாட்டி வருகிறார். இதுமட்டுமின்றி, ஒரு சந்தர்ப்பத்தில் பரத் சிங், முதலமைச்சரை திமிர் பிடித்தவர் என்றும் கூறினார்.
திமிர் பிடித்த முதல்வர்: கொந்தளித்த எம்எல்ஏ
“நான் இதை செய்தேன், அதை செய்தேன் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறுகிறார், இந்த ஆணவ பேச்சு அவருக்கு அழகல்ல” என்று பரத் சிங் கூறியிருந்தார். “நீங்கள் கேட்டு அலுத்துப்போவீர்கள், ஆனால், கொடுப்பதில் நான் சோர்வடைய மாட்டேன் என்று அசோக் கெலாட் கூறுகிறார். கானின் குடிசைகள் நிறைந்த கிராமத்தை கோட்டாவில் சேர்க்க வேண்டும் என நான் கேட்டேன். ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை. நான் 100 கிராமங்களின் உரிமையை கேட்கவில்லை. என்னுடைய கோரிக்கை முற்றிலும் சரியானது.” என அவர் மேலும் கூறினார். “வயலை வேலி தின்பதும், பரத் சிங் மௌனமாக இருப்பதும் சாத்தியமில்லை” என்று அவர் காட்டமாக பேசியுள்ளார்.
முதல்வருக்கு முடி மற்றும் கடிதத்தை அனுப்புவேன்: எம்எல்ஏ ஆவேசம்
கானின் குடிசைகளை கோட்டாவில் இணைக்க வேண்டும் என்பது சங்கோடு எம்.எல்.ஏ. -வின் கோரிக்கையாக உள்ளது. கான் கி ஜோபரியா கிராமம் கோட்டாவில் சேர்க்கபப்டும் வரை வரை தலையில் முடி வளர்க்க மாட்டேன் என அவர் உறுதி பூண்டுள்ளார். இதுதவிர, முதல்வர் கெலாட் இன்று கோட்டாவுக்கு வந்தால், தனது தலைமுடி மற்றும் கடிதத்தை அவரிடம் தரப்போவதாகவும், அப்படி வரவில்லை என்றால், தபால் மூலம் முடி மற்றும் கடிதத்தை அனுப்ப இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது
செவ்வாயன்று கோட்டா நகரின் குமன்புரா பகுதியில் சங்கோட் எம்எல்ஏ பரத் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராவணனின் உருவ பொம்மையை எரித்தனர். எம்.எல்.ஏ., காலையில் மொட்டை அடித்துக் கொண்டார். முதலமைச்சருக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில் கெலாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய இரண்டாவது எம்.எல்.ஏ
சட்டசபை தேர்தலுக்கு முன், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சமீப காலங்களில் குரல் எழுப்பிய இரண்டாவது காங்கிரஸ் தலைவர் பரத் சிங் ஆவார். சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவும் கெலாட் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதற்குப் பிறகு, குதா காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. மேலும் அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் 90 உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கியது இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ