நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. அதில், 2 இடங்கள் பா.ஜ.க.வுக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. மற்றொரு பதவிக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இவர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம் அடைந்து விட்ட நிலையில், இந்த முறையும் ஜெய்ராம் ரமேஷ் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜெய்ராம் ரமேசுக்கு பதிலாக காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி தேர்தல் - ஜூன் 10ம் தேதி அறிவிப்பு
இதே போல, பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 7 உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் தேர்வு, ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஏற்கனவே கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கே.சி.ராமமூர்த்தியை மீண்டும் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருப்பதால், இந்த முறையும் அவரை கர்நாடகத்தில் இருந்தே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
அதுபோல், 3-வது இடத்திற்கு விஜய சங்கேஷ்வரை நிறுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 3-வது வேட்பாளரை நிறுத்தினால், பா.ஜ.க வெற்றி பெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதனால் 3-வது வேட்பாளரை நிறுத்திவிட்டு, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நிர்மலா சீதாராமன், கே.சி.ராமமூர்த்தி, விஜய சங்கேஷ்வர் ஆகிய 3 பேரின் பெயர்களை சிபாரிசு செய்து, பா.ஜ.க. மேலிட தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe