பணிக்கொடை(Gratuity) தொகைக்கான உச்சவரம்பை ரூபாய் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6-வது ஊதிய கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து அமைக்கப்பட்ட 7-வது ஊதிய கமிஷன், தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) உச்சவரம்பை ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்த ஊதிய கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.
ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
Income Tax Exemption for Gratuity under Section 10(10)(iii) of the Income Tax Act has been enhanced to Rs. 20 lakh. Would benefit all PSU employees and other employees not covered by Payment of Gratuity Act.
— Arun Jaitley (@arunjaitley) March 5, 2019
இந்நிலையில், பணிக்கொடை தொகைக்கான உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த அறிவிப்பால் பொதுத்துறை பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜட்டில் தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. முன்பு ரூ.2.5 லட்சமாக இருந்த வரி விலக்கு உச்ச வரம்பு, நடந்து முடிந்த இடைக்காலப் பட்ஜெட்டில் இரட்டிப்பாக்கப்பட்டது.
இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் மூன்று கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.