நம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும் என அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்!!
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா வியாழக்கிழமை இந்திய வரலாற்றாசிரியர்களை "இந்திய கண்ணோட்டத்தில் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். வீர் சாவர்க்கர், 1857 ஆம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தை, முதல் இந்திய சுதந்திர போர் என்று குறிப்பிட்டிருக்கவில்லை என்றால், இன்று நம் அனைவருக்கும் அது வெறும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சாதாரண போராட்டமாக தான் தெரிந்திருக்கும். எனவே, இந்தியாவின் வரலாற்றை மாற்றி நம் புதிய கண்ணோட்டத்துடன் நாம் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில்; "இந்தியா எந்த ஒரு நாட்டையும் இது வரை போர் முறையில் அடிமை படுத்த நினைத்ததில்லை. எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகதான் இந்தியா இருந்து வருகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை "முதல் இந்திய சுதந்திர போர்" என்ற பெயர் கொண்டு குறிப்பிட்டவர் வீர் சாவர்க்கர் என்றழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கர். அவர் அப்படி குறிப்பிடாமல் இருந்திருந்தால், முதல் இந்திய போர் நமது வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிரான சாதாரண போராட்டமாக தான் எழுதப்பட்டிருக்கும்.
நமது இந்திய மன்னர்களிலே விக்ராமாதித்தன் போன்ற மன்னர்கள், இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்ட பலரிடமிருந்து நமது நாட்டை பாதுகாத்துள்ளனர். அவர்கள் குறித்த எந்த ஆவணமும் நம் கையில் இல்லாததால் அவர்கள் குறித்து நம் வரலாற்றில் எதுவும் பதிவாக்கப்படவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் முகலாயர்களையும், ஆங்கிலேயர்களையும் குறை கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்? நமது வரலாற்றை நம் கண்ணோட்டத்தில் நாம் மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது. நமது வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்த கோரிக்கையை நான் முன் வைக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி கட்சி இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில், இந்துக்களின் ஓட்டுகளை பெறவும், தாங்கள் மட்டுமே இந்துக்களுக்கான கட்சி என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கவும் சாவார்க்கருக்கு, பாரத ரத்னா என்ற உறுதி மொழியை பாஜக முன் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.