அசாம் மாநிலத்தில் 10 நாட்களுக்கு பிறகு செல்போன் இணையதள சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் மாணவர்கள் மூலம் தொடங்கிய போராட்டம், தற்போது மக்கள் போராட்டமாக மாறி உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் மட்டுமில்லை, அரசியல் கட்சிகளும் ஆரம்ப முதலே, இந்த CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன.
இதற்கிடையில், வியாழக்கிழமை, திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இடதுசாரி கட்சிகள் முழு அடைப்பு அறிவித்துள்ளன, மேலும் மும்பை மற்றும் பிற இடங்களில் எதிர்ப்பு அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே 144-வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே, 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்த நிலையிலும், போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அங்கு மூண்ட போராட்டம் பரவுவதை தடுக்கும் வகையில், செல்போன் இணையதள சேவை கடந்த 11ம் தேதி முடக்கப்பட்டது.
இந்நிலையில் கவுகாத்தி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் இணையதள சேவை கடந்த 9ம் தேதி முதல் துண்டிக்கப்பட்டது. அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்றதால் இணையதள சேவை முடக்கத்தை மீண்டும் மீண்டும் மத்திய அரசு நீடித்து வந்தது. இந்நிலையில் அசாம் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுவிட்டதாக அம்மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.