டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!!

Last Updated : Apr 23, 2017, 11:22 AM IST
டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!! title=

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி நகராட்சிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

மத்தியில் ஆளும் பாஜக, டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை தவிர பல சுயேட்சை வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள இந்த தேர்தலுக்காக சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகளுக்கு புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் தகுதி படைத்த ஒரு கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 206 வாக்காளர்கள் இன்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

டெல்லி கவர்னர் அனில் பைஜால் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதும் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மத்திய மந்திரிகள், டெல்லி மந்திரிகள் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

பதற்றமான பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும்.

Trending News