முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான, சத்தீஸ்கர் ஜனதா காங்.,குடன், கூட்டணி அமைக்கப்போவதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளரான அஜித் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாயாவதி வெளியிட்டதால், காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் வேட்பாளராகவும் அஜித் ஜோகியை அவர் அறிவித்தார். தவிர, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் 22 வேட்பாளர்களின் பெயர்களையும் அவர் தன்னிச்சையாக அறிவித்துவிட்டதால், காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பி.ஜே.பி-க்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மாயாவதியுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால், தன்னிச்சையாக வேட்பாளர்கள் பட்டியலை மாயாவதி வெளியிட்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி இனிமேல் சாத்தியமில்லை என்று தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாயாவதியின் இந்த அதிரடி அறிவிப்பால், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது.