அகில இந்திய வானொலி நிலையங்களில், பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்: மேனகா காந்தி
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன்” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணைய தளத்தில் பரவி வருகிறது. இதுகுறித்த புகார்களை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இநிலையில், நாடு முழுவதும் பல்வேறு அகில இந்திய வானொலி நிலையங்களில், பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் எழுந்திருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருக்கிறார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய வானொலி நிலையங்களை நிர்வகிக்கும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணையமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேனகா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
Union Minister Maneka Gandhi has written to I&B minister RS Rathore over reports of women working as casual announcers in All India Radio (AIR) being allegedly sexually harassed, asks him to ensure that a sensitive&fair system is put in place to address any such grievances in AIR pic.twitter.com/JnvbRpb1pb
— ANI (@ANI) November 15, 2018
அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் சங்கத்திலிருந்து, வரப்பெற்ற பாலியல் தொந்தரவு தொடர்பான புகார் கடிதத்தின் அடிப்படையிலேயே, ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருக்கிறார்.