Arrest Narendra Modi Trending Hashtag : பிரதமர் நரேந்திர மோடிக்கு, வட இந்தியாவில் இருப்பது போல, தென்னிந்தியாவில்-குறிப்பாக தமிழ் நாட்டில் பெரிதாக செல்வாக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது சமீபத்திய நடவடிக்கைகளால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருந்த வட இந்தியர்கள் சிலரே, “மோடியை கைது செய்ய வேண்டும்” என்று அவர்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் கோஷம் எழுப்பி வருகின்றனர். தற்போது, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் “#ArrestNarendraModi” என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன? நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் இந்த அளவிற்கு வெறுப்பு கொண்டுள்ளது ஏன்?
#ArrestNarendraModi ஹேஷ்டேக் வைரல்!
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவ கெளடாவின் பேரன், பிரஜ்வால் ரேவண்ணாதான், தற்போது அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கங்களிலும் தலைப்பு செய்தியாக இருக்கிறார். கர்நாடகாவின் எம்.பியான இவர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இவர் கர்நாடக தொகுதியில் போட்டியிட இருந்தார். இந்த சமயத்தில்தான், இவர் பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டனர்.
பிரஜ்வால் ரேவண்ணா மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக இத்தகைய அநீதி இழைக்கப்பட்ட பிறகும், பாஜக கட்சி ரேவண்ணாவை காப்பாற்ற நினைப்பதாக மக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இன்னும் பலர், பெண்களுக்கு எதிராக இத்தகைய வனகொடுமை இழைக்கப்பட்டிருக்கும் போது பிரதமர் மோடி இது குறித்து வாய் திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இதனாலேயே, மோடியை கைது செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய மோடி?
2024 நாடுளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பொது கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய தகவல்கள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தின. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் கிடைக்க வேண்டிய வளங்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு சென்று விடும் என்று கூறினார். இதையடுத்து, இவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி மக்களிடையே இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் வகையில் நரேந்திர மோடி பேசியதாக தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த புகார்கள் குறித்து வாய் திறக்காத அவர்கள், பின்னர் இந்த புகார்களை பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
மணிப்பூர் கலவரம்!
சில மாதங்களுக்கு முன்பு, மணிப்பூரில் கலவரம் வெடித்தது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இதில், உச்சக்கட்டமாக பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் வீடியாேக்கள் இணையத்தில் உலா வர தொடங்கின. மணிப்பூர் கலவரத்தில் இந்த அட்டூழியங்கள் பல மாதங்களாக நடைப்பெற்று வந்த போதிலும், இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்ததால் இது குறித்து வெளி உலகிற்கு தெரிய வர தாமதம் ஏற்பட்டது. பெண்களை சித்திரவதை செய்யும் தகவல் ஆதாரத்துடன் வெளிவந்த போதிலும், பிரதமர் மோடி இது குறித்து வாய் திறவாமல் இருந்தார். இது குறித்து கண்டனங்கள் எழவே, பின்னர் நாடாளுமன்றத்தில் “இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்!
கடந்த ஆண்டு, மல்யுத்த வீராங்கனைகள் பலர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக உறுப்பினருமான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்களை தொடுத்தனர். பல நாட்கள் தொடர்ந்த இவர்களின் போராட்டத்திற்கு, எதிர் கட்சி உறுப்பினர்கள் பலர் கரம் கொடுத்து உதவி புரிந்தனர். ஆனால், பிரிஜ் புஷன் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் தேடித்தந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கடந்த ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி, தான் மல்யுத்த போட்டிகளில் இனி விளையாட போவதில்லை என்று கூறி ஓய்வை அறிவித்து, தான் வாங்கிய பதக்கங்களையும் திருப்பி கொடுத்துவிட்டார். இது குறித்தும் பிரதமர் மோடி வாய் திறவாமல் இருந்ததை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ