நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10000 செலுத்தப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு..!
கேரள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடும் நிலையில் மழை வெள்ளத்தால் சின்னா பின்னமான பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
100 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்குக் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவுகள், வெள்ளப் பெருக்கு என கேரள மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி விட்டனர்.
நாடு முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு ஆதரவாக நிதியும் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன் மத்திய அரசு 600 கோடி ரூபாய் நிதி அளித்துள்ள நிலையில், இதுவரை 535 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பினராய் விஜயன் குறிப்பிட்டார். நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், வீடுகளை இழந்தவர்கள் வீடுகட்டுவதற்காக வட்டியில்லாத கடனாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கனமழை வெள்ளத்தால் உருகுலைந்துள்ள கேரளாவிற்கு, வழக்கமானதை விட, வேறு அளவுகோலை பயன்படுத்தி நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை, பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.
சுமார் 7 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகிவிட்டன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.வெளளம் வடியத் தொடங்கியதால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கேரளாவில் இயல்பு நிலை திரும்புகிறது.