காஷ்மீர்: ராஜ்நாத்தும், மெஹ்பூபாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

Last Updated : Aug 25, 2016, 02:31 PM IST
காஷ்மீர்: ராஜ்நாத்தும், மெஹ்பூபாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். title=

காஷ்மீரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காஷ்மீர் சென்றார். பல முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து ராஜ்நாத்தும், மெஹ்பூபாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

அப்போது கூறுகையில்:- இதுவரை காஷ்மீரில் நான் 20-க்கும் மேற்பட்ட குழுவினரையும் மற்றும் இது சம்மந்தமாக இரண்டு நாநாட்களில் 300-க்கும் மேற்பட்ட நபர்களை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாநிலத்தில் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். காஷ்மீரில் நடக்கும் கலவரத்தில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் இளைஞர்கள் பலியாவது வேதனை அளிக்கிறது. இங்கு அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் பிரச்னை மத்திய அரசுக்கு கவலையளிக்கிறது. 

காஷ்மீர் இளைஞர்கள் கையில் கணிப்பொறிகளும் புத்தகங்களும் தான் இருக்க வேண்டும். கற்கள் அல்ல. கலவரத்தை தூண்டும் நபர்களும் அமைப்புகளும் கண்டறியப்பட்டு ள்ளனர். காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலமும் காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியும் இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்தது. ரவை குண்டுகள் பயன்படுத்துவதை கட்டுப் படுத்துவதோடு இதற்கு மாற்று குறித்தும் ஆலோசனை செய்யப்படும். காஷ்மீர் வெள்ளத்தின் போது ராணுவத்தின் உதவியை யாரும் மறந்து விடக்கூடாது. கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள ராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் குறித்த நிபுணர் குழு அறிக்கை 2 அல்லது 4 நாளில் கிடைத்து விடும். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மாற்று கொள்கைகள் கொண்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பேச்சுவார்த்தை, காஷ்மீர் மக்கள் உணர்வு அடிப்படையில் நடக்கும். காஷ்மீர் குறித்து அனைவருடனும் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பெருமையை சீர்குலைக்க சதி நடக்கிறது. காஷ்மீருக்கு விரைவில் அனைத்து கட்சி குழு வரும் என்றார்.

முதல்வர் மெஹ்பூபா முப்தி கூறுகையில்:- சிலர் ராணுவ முகாம்களை தாக்க நமது குழந்தைகளை தூண்டி விடுகின்றனர். அவர்களுக்கு, நமது குழந்தைகள் பாதிக்கப்பட வேண்டும் என்பது விருப்பம். காஷ்மீரில் 95 சதவீதம் பேர் கலவரத்தை விரும்பவில்லை. அமைதியை தான் விரும்புகின்றனர். அவர்களை அரசு ஒருங்கிணைத்துள்ளது. மொத்த மக்களில் 5 சதவீதம் பேர் தான் கலவரத்தை தூண்டுகின்றனர். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. 

மேலும் காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கவலை கொண்டுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் காஷ்மீர் கலவரத்தினால் கவலையடைந்துள்ளனர். பயங்கரவாதிகள், காஷ்மீர் இளைஞர்களை தங்கள் கேடயமாக பயன்படுத்துகின்றனர். இது மாறவேண்டும் எனக்கூறினார்.

Trending News