கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது!!
அதானி, காக்வாட், கோகக், யெல்லபுரா, ஹிரேகேரூர், ராணிபென்னூர், விஜயநகரம், சிக்பல்லபுரா, கே.ஆர்.புரா, யஷ்வந்த்புரா, மகாலட்சுமி லே அவுட், சிவாஜி நகரா, ஹோசாகோட், கே.ஆர்.பெட்டே, ஹூன்சூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
பாஜகவும் காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மதசார்பற்ற ஜனதா தளம் 12 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. 17 எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. இதில் 14 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது. கர்நாடகத்தில் மைனாரிட்டி அரசாக உள்ள பாஜகவின் நான்கு மாத ஆட்சி நீடிக்குமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க உள்ளன.
#Bengaluru: Voting for by-election to Shivaji Nagar Constituency, underway at BBMP PU College and High School, Tasker Town. #KarnatakaByelection pic.twitter.com/IQ3sL07l7G
— ANI (@ANI) December 5, 2019
மாலை 6 மணி வரை நடக்கும் இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். தொகுதி வாரியாக பார்த்தால், அதானி தொகுதியில் 8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜயநகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 9 பேர், கே.ஆர்.புரத்தில் 13 பேர், யஷ்வந்தபுரத்தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் போட்டியிடுகிறார்கள்.
இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக எல்லாப்பூர் மற்றும் கே.ஆர்.பேட்டையில் தலா 7 பேரும் போட்டிக்களத்தில் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.