புது டெல்லி: சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது தான் எங்கள் கட்சியின் நிலைபாடு. எனவே என்.ஆர்.சி (National Register of Citizens) சட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSR Congress Party) தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடாபாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், நாங்கள் என்.ஆர்.சியை எதிர்ப்போம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆந்திரா அதை ஆதரிக்க எந்த வழியும் இல்லை. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது தான் எங்கள் கட்சியின் நிலைபாடு. எனவே என்.ஆர்.சி சட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கூறினார், அங்கு அவர்
கடந்த வாரம், துணை முதல்வர் அஸ்மத் பாஷா ஷேக் பெபாரி, என்.ஆர்.சி அல்லது முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரான எந்தவொரு மசோதாவையும் ஆந்திரா அரசு ஆதரிக்காது என்று கூறியிருந்தார். எப்போதும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களுக்காக கட்சி ஆதரவளித்து வருகிறது என்றார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு (Citizenship Amendment Act) எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் என்.ஆர்.சி சட்டத்துக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில் அஸ்ஸா உடபட வடகிழக்கு மாநிலத்தில் ஆரம்பித்த போராட்டம், பிறகு டெல்லியில் மாணவர்கள் CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போரட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன்பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, CAA-NCR சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தமிழ் நாடு என பல மாநிலங்களில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்தநிலையில், நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாஜக (BJP) சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் உரையாற்றிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்துப் கருத்துத் தெரிவித்த அவர், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போலி வீடியோக்களைப் பகிர்ந்து மக்கள் தூண்டிவிடுகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஒருசில கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மத்திய அரசு 1.5 கோடி வீடுகளை கட்டித் தந்துள்ளதாகவும், அவர்களிடம் மதம் குறித்து கேட்டதில்லை எனவும், குடியுரிமை சட்டத்திருத்தம் இந்திய குடிமகன் யாரையும் பாதிக்காது எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் இந்திய மக்களின் நலனுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மதிக்க வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.
ஆனால் பல மாநில அரசு என்.ஆர்.சி., மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. அதாவது, மத்திய பிரதேச முதல்வர், பஞ்சாப் மாநில முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் கேரள முதல்வர் போன்றவர்கள், எங்கள் மாநிலத்தில் இந்த சட்டங்களை அமல் செய்யமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய சனதா தளம் கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமார், பீகார் மாநிலத்தில் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) செயல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது குடிமக்களின் தேசிய பதிவு சட்டத்தை ஆந்திரா மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.