தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் அறிவிப்பு...
தென்மேற்கு பருவமழை ஜூன் 5 ஆம் தேதிக்கு பதிலாக, ஜூன் 1 ஆம் தேதியே (வழக்கம்போல), துவங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிக்கு மழையை கொடுப்பது தென்மேற்கு பருவமழை காலகட்டம் தான். தமிழகத்தை பொறுத்த அளவில் வடகிழக்கு பருவமழை காலகட்டம் அதிக மழையை கொடுக்கும் என்றாலும், தென்மேற்கு பருவமழை என்பது, கேரளாவில் தொடங்கி, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, மற்றும் சில வடமாநிலங்கள் வரை நல்ல மழையை கொடுத்து விவசாய வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருக்கக் கூடிய காலகட்டமாகும்.
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால், இந்த முறை ஜூன் 5 ஆம் தேதி துவங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால், இன்று வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் மாறுதல்கள் செய்துள்ளது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி வழக்கம் போல தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் நாளை மறுநாள், தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதுதான்.
இந்த தாழ்வு பகுதியால், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை துவங்குகிறது. ஏற்கனவே, மாலத்தீவு, அந்தமானின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளது. மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். எனவே, மத்திய கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.