விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீநகரில் உள்ள தமது அணியில் இணைவதற்காக திரும்பினார் அபிநந்தன்!!
டெல்லி: கடந்த மாதம் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன், இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்தியா திரும்பினார். அவர் நான்கு வாரம் விடுமுறைக்கு பின்னர், ஸ்ரீநகரில் தனது படைக்கு திரும்பியுள்ளார்.
கடந்த மாதம் 17 ஆம் தேதி பாகிஸ்தானின்F16 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழக வீரர் அபிநந்தன் நான்கு வாரம் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் ஸ்ரீநகரில் உள்ள தமது அணியில் இணைவதற்காக திரும்பியுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அவர் மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார். பாகிஸ்தானால் சிறைப் பிடிக்கப்பட்ட அபிநந்தன் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். ஆனால், இரண்டு நாட்கள் அங்கு பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்த அபிநந்தனிடம் நடத்தப்பட்ட சித்ரவதை மற்றும் விசாரணை குறித்து விமானப் படையினர் 2 வாரகாலமாக அபிநந்தனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணைக்குப் பின்னர் விடுமுறையில் செல்ல அபிநந்தனுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடித்து ஸ்ரீநகர் திரும்பிய அபிநந்தன் மீண்டும் பணியில் இணைய உள்ளார். 4 வார கால விடுப்பில் செல்ல விரும்பிய அபிநந்தன் தமது குடும்பத்தினருடன் சென்னையில் விடுமுறையைக் கழிப்பார் என்று கருதப்பட்ட போதும், அவர் மீண்டும் தமது அணியில் இணைவதற்காக ஸ்ரீநகருக்கே திரும்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.