பீகார், அசாம், மேற்கு வங்காளம் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
வெள்ள மீட்பு பணி குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அதேசமயம் கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா உள்பட 11 நதிகளில் வெள்ள அபாயம் அளவு தண்ணீர் ஓடுகிறது. அங்கு 21 மாவட்டங்களில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வெள்ளத்தின் காரணத்தால் சுமார் 110 பேர் மரணமடைந்தனர்.
திப்ரு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழைக்கு 15 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவை பல இடங்களில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கன மழையால் பீகார், அசாம் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, வெள்ள நிவாரண பணிகளில் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.