குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனால் தற்போது வரை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எந்த நேரத்திலும் தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்படும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டு பவ்நகர் மற்றும் வதோதரா பகுதியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பவ்நகர் மற்றும் பரூச் இடையே ரூ.615 கோடி மதிப்பிலான படகு போக்குவரத்தினை தொடங்கி வைத்தார். அதன்பின் படகில் பயணித்து தஹேஜ் நகருக்கு சென்று பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர்:- பொருளாதாரம் நல்ல முறையில் இயங்குவதற்கான முனைப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை இந்த திசையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள். குஜராத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் முந்தைய மத்திய அரசு செயல்பட்டது. நாங்கள் மாநிலத்தினை மீண்டும் வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.