Thu & Fri அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு

டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 13, 2019, 09:34 PM IST
Thu & Fri அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு title=

புதுடெல்லி: வட இந்தியாவில் காற்று மிகவும் மோசமடைந்து (Amid High Air Pollution) வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் (Schools) நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது.

தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் வானங்களை இயக்கம் போது கண்களில் மிகவும் எரிச்சல் ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு புதன்கிழமை அதிகாலை, தீவிரம் என்ற அளவுக்கு சென்றது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, புதன்கிழமை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களாக காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வயல்வெளிகளுக்கு தீவைக்கப்படுவதால் உருவாகும் புகை டெல்லிக்கு வரத்தொடங்கியதே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. பயிர்க் கழிவுகள் எரிப்பதை, அந்தந்த மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவை சமாளிக்க ஒற்றைப்பட - சமமான வாகன எண் (Odd-Even scheme) திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதாவது ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்பதாகும். 

இந்த திட்டம் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தேவையான பாதுகாப்பை வழங்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Trending News