புவனேஸ்வர்: வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. சுமார் காற்றின் வேகம் மணி நேரத்திற்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபானி புயல் மேற்குவங்கம் நோக்கி நகருகிறது.
மேற்குவங்க கடல் பகுதி நோக்கி புயல் நகரும் போது புயலின் தாக்கம் ஒடிசாவில் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மீட்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக மூன்று பேர் இறந்தனர். ஒரு பெண் கடுமையாக காயமடைந்துள்ளார். ஒடிசாவின் நயகாட் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண் இறந்தார். கோனார்க்கில் உள்ள வீட்டின் சுவர் வீழ்ச்சி காரணமாக ஒரு பெண் கடுமையாக காயமடைந்தார். அதே சமயம், பூரியில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு ஒரு நபரை அழைத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது தவிர, பட்டமுண்டை பகுதியில் ஒரு பெண் இறந்துள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடந்தது. ஃபானி புயலால் ஒடிஷா மாநிலம் புரியில் 142 கிமீ முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவையும், தொலைத் தொடர்பு சேவையும் பாதிப்பு அடைந்துள்ளன. சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.