கடந்த 2016-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டது. அந்த முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் இந்த வசதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாரை சேர்ந்த ஸ்ரீநாத் எர்ணாகுளத்தில் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த அவர் மேல் படிப்பு படிக்க வசதி இல்லாததால் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார்.
இவர் தற்போது கேரளா தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேல் படிப்பு படிக்க வசதி இல்லாத இவர் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? இவர் தேர்வுக்கு தயாரான விதம் சற்று வித்தியாசமானது. தனது செல்போனில் வைபை இணைத்து ஹெட்போன் காதில் வைத்துக்கொண்டு அதன் மூலம் பாடங்களை கேட்டு படித்து வந்துள்ளார்.
தனது பணிகளுக்கு இடையே ஆன்லைனில் டிஜிட்டல் பாடங்களை காதில் கேட்டு மனதில் உள்வாங்கியுள்ளார். சமீபத்தில், கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், ஸ்ரீநாத் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். பொதுத்தேர்வுகளுக்கு படிப்பவர்கள் என்றாலே, எப்போதும் தங்களை சுற்றி புத்தகங்களுடன் இருப்பார்கள் என்ற நிலையை ஸ்ரீநாத் தகர்த்தெறிந்துள்ளார்.