இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆளுநரை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு தகவல் அனுப்பி உள்ளார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2019, 05:43 PM IST
இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆளுநரை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை title=

பெங்களூரு: இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு தகவல் அனுப்பி உள்ளார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் அமர்வு, ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது. அவர் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்றும், அதேசமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏ-க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழலில், காலை 11:30 மணிக்கு கர்நாடகா சட்டசபை கூட்டம் தொடங்கியது. குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். இதனால் கோபமடைந்த பிஜேபி தலைமையிலான எதிர்கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் கால தாமதம் செய்வதாகக்கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. 

இதனையடுத்து ஜெகதீஷ் ஷெட்டார், அரவிந்த் லிம்பாவாலி, பசவராஜ் பொம்மை, எஸ்.ஆர். விஸ்வநாத் மற்றும் என் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பாஜக தூதுக்குழு இன்று ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு குறிப்பை சமர்ப்பித்தது. அதில் கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அடுத்து ஆளுநர், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

Trending News