ஆந்திராவில் காவலர்களுக்கு இனி வார விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்!
ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதல் அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.
'ரையத் பரோசா' எனும் திட்டத்தை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் எனவும் அறிவித்தார். இதனையடுத்து நாட்டிலேயே முதன்முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்தார்.
அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் எனவும் அறிவித்தார். தொடர்ந்து மண் அள்ளுவது தொடர்பாக புதிய கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளதாக கூறி 15 நாட்களுக்கு மண் அள்ள தடை விதித்தார்.
இந்நிலையில் தற்போது ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவு பிரப்பித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், ‘புதிய அறிவிப்பின்படி ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்கள், துணை காவலர்கள், கான்ஸ்டெபில்கள், காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும். இதன் மூலம் 67,804 பேர் பயன்பெற முடியும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.