புதுடெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் ஹேக்கிங் செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமும் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பெயரில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஒன்று உள்ளது. இதில் மர்ம நபர்கள் நேற்று இரவு 8.45 மணிக்கு ஊடுருவி முடக்கினர். மேலும் அதில் அவதூறு வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. ஹேக்கிங் செய்யப்பட்டு, டிவிட்டரில் காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினரை பற்றி ஆபாசமான வார்தைகளை கொண்டு தவறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி அலுவலக அதிகாரிகள் அந்த வாசகங்களை உடனடியாக அழித்தனர். மேலும் முடக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவிலும் மோசமான வார்த்தைகளால் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ராகுல் காந்தி டிவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.