புதுடில்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை ஒரு நேர்காணல் செய்திருந்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அதில் அரசியல் தவிர்த்து அனைத்து விதமான கேள்விகளை கேட்டார் அக்ஷய் குமார். மேலும் 2019 மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு முன்பு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மேலும் அனைவரையும் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு பிரதமர் மோடி ட்வீட் செய்து பலருக்கு டேக் செய்திருந்தார். அதில் நடிகர் அக்ஷய் குமாரும் ஒருவர். "மக்கள் வாக்களிப்தே உண்மையான ஜனநாயகம்" என பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதில் கூறியிருந்தார்.
மும்பையில் வசித்து வரும் நடிகர் அக்ஷய் குமார், மக்களவை தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற செய்தி பரவியது. அதுக்குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அக்ஷய் குமாரிடம் "நீங்கள் ஏன் வாக்களிக்கவில்லை. அதற்க்கான ஆதாரம் எங்கே? இது தான் உங்கள் தேசப்பற்றா? போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் "எனக்கு ஒன்று புரியவில்லை. எதற்காக எனது தேசப்பற்று மீது கேள்விகள் எழுப்படுகிறது? என் தேசப்பற்று மீது எதற்காக எதிர்மறை கருத்துகள் வைக்கப்படுகிறது. எனது குடியுரிமை பிரச்னை தேவையில்லாமல் சர்ச்சையாக்கப்படுவது எனக்கு வேதனை அளிப்பதாக உள்ளது. கனடா நாட்டு குடியுரிமை வைத்திருப்பதை ஒருபோதும் நான் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவுக்கு சென்றது கூட கிடையாது.
நான் இந்தியாவில் வாழ்கிறேன், பணியாற்றுகிறேன். அனைத்திற்கும் வரி செலுத்துகிறேன். இந்தியாவை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் நான் அக்கறை கொண்டுள்ளேன். இந்தியா மீது நான் கொண்டுள்ள அன்பையோ.. எனது நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.