திருவனந்தபுரம்: தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லை என கூறி 6 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இத்தாலிய திரைப்படம் ஒலிபதர்க்கு முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. இந்நிலையில், தேசிய கீதத்தின்போது சிலர் எழுந்து நிற்காலம் அவமதித்தார்கள்.
சர்வதேச திரைப்பட திருவிழா கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்று திரைப்படங்களை கண்டு ரசிக்க பல நகரங்களில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், திரைப்பட விழாவில் திரைப்படம் ஒன்று திரையிடப்படும்போது, ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்தின்போது, சிலர் எழுந்து நிற்கவில்லையாம். போலீசாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அவர்கள் அமர்ந்தே இருந்துள்ளனர்.
இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லை என கூறி 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
படவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியும் அவர்கள் எழுந்திருக்க மறுத்து விட்டதால், அவர்கள் ஆறுபேரையும் கைதுசெய்த போலீசார், அருகாமையில் உள்ள மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், தொடர்ந்து நடைபெற்றுவரும் திரைப்பட விழாவின்போது தேசிய கீதத்தை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யும்படி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.